1651. | தா இல் முனிவன் புகல, தளராநின்ற மன்னன், நாவில் நஞ்சம் உடைய நங்கை தன்னை நோக்கி, ‘பாவி! நீயே, "வெங் கான் படர்வாய்" என்று, என் உயிரை ஏவினாயோ? அவனும் ஏகினானோ?' என்றான். |
தா இல் முனிவன் புகல - குற்றமற்ற வசிட்டமுனிவன்இவ்வாறு சொல்ல; தளராநின்ற மன்னன் - வருத்தத்தால் தளர்கின்ற சக்கரவர்த்தி; நாவில் நஞ்சம் உடைய நங்கை தன்னை நோக்கி - நாக்கிலே விடம் உடைய பெண்ணாகியகைகேயியைப் பார்த்து; ‘பாவி! நீ என் உயிரை வெங்கான் படர்வாய்' என்று-பாவியாகிய நீ என் உயிராகிய இராமனைக் கொடிய காட்டிற்குச் செல்க என்று; ஏவினாயோ! -கட்டளையிட்டாயோ; அவனும் ஏகினானோ?- அந்த இராமனும் காட்டிற்குச்சென்றுவிட்டானோ;' என்றான்-. "நாகம் எனும் கொடியாள்தன் நாவின் வந்த சோகவிடம்" என முன்னும் (1505.) வந்துள்ளதை‘நாவில் நஞ்சம் உடைய நங்கை' என்பதனுடன் ஒப்பிடுக. ‘நீயே' ‘ஏ' காரம் பிரிநிலை. ‘ஓ'காரம் வினாப் பொருட்டு. 46 |