1653.‘விழிக்கும் கண் வேறு இல்லா,
     வெங்கான், என் கான்முளையைச்
சுழிக்கும் வினையால் ஏகச்
     சூழ்வாய்; என்னைப் போழ்வாய்;
பழிக்கும் நாணாய்; மாணாப்
     பாவி! இனி, என் பல? உன்
கழத்தின் நாண், உன் மகற்குக்
     காப்பின் நாண் ஆம்' என்றான்.

     ‘விழிக்கும் கண் வேறு இல்லா என் கான்முளையை - விழித்துப்
பார்க்கும் கண்இராமனையன்றி வேறாகப் பெற்றிராத என்னுடைய
மகனாகிய இராமனை;  வெங் கான் - கொடியகாட்டிற்கு; சுழிக்கும்
வினையால் -
சூழ்வினையால்;  ஏக - போகும்படி;  சூழ்வாய்! - தீய
ஆலோசனை செய்தவளே; என்னைப் போழ்வாய் - என்னைப்
பிளப்பவளே;  பழிக்கும் நாணாய் - வருகின்ற  பழிக்குச் சிறிதும்
நாணமுறாதவளே;  மாணாப் பாவி - மாட்சிமை இல்லாத பாவியே; இனி
என் பல? -
இனிப் பல பேசிப்பயன் என்ன;  உன் கழுத்தின் நாண் -
உன் கழுத்தில் நான் கட்டிய மங்கலக் கயிறு;  உன் மகற்கு - உன்
பிள்ளையாகிய பரதனுக்கு;  காப்பின் நாண் ஆம்! -பட்டாபிஷேக
காலத்தில் கையில் கட்டுகின்ற ரக்ஷாபந்தனமாகிய காப்புக் கயிறாக ஆகும்;'
என்றான் - .

     "என் மகன் என்கண் என்னுயிர்" என்று முன் சொல்யது போல(1526)
விழிக்கும் கண் இராமனையன்றி எனக்கு வேறில்லை என்றான் தயரதன்.
வரத்தைவலியுறுத்தலால் உன் கணவனாகிய யான் இறப்பேன்; அப்போது நீ
அறுத்தெறிகின்ற தாலிக்கயிறு உன்மகனுக்குக் காப்புக் கயிறு ஆக உதவும்
என்று கூறினான்.                                             48