கைகேயி, பரதன் இருவரையும் தயரதன் துறத்தல் 

1654.இன்னே பலவும் பகர்வான்,
     இரங்காதாளை நோக்கி,
‘சொன்னேன் இன்றே; இவள் என்
     தாரம் அல்லள்; துறந்தேன்;
மன்னே ஆவான் வரும் அப்
     பரதன் தனையும் மகன் என்று
உன்னேன்; முனிவா! அவனும்
     ஆகான் உரிமைக்கு' என்றான்.

     இன்னே - இவ்வாறு;  பலவும்  பகர்வான் - பல சொற்களையும்
சொல்பவனாயதயரதன்; இரங்காதாளை நோக்கி - சிறிதும் மனம் இளகாத
கைகேயியைப் பார்த்து;  முனிவா! - முனிவரே; இன்றே  சொன்னேன்,
இவள் என் தாரம் அல்லள்,  துறந்தேன் -
இப்பொழுதே
சொல்லிவிட்டேன்; இவள் இனி என் மனைவி  என்னும் தகுதிக்கு
உரியவள்அல்லள் -
இவளை நான் கைவிட்டேன்; மன்னே ஆவான்
வரும் அப்பரதன்தனையும் -
அரசனாக முடி சூடுதற்கு வருகின்ற  இவள்
மகனாகிய அந்தப் பரதனையும்;  மகன் என்று உன்னேன் -என் மகன்
என்ற கருதேன்; அவனும் உரிமைக்கு ஆகான் - அப்பரதனும் எனக்குச்
செய்யவேண்டிய  இறுதிக்கடன்களுக்கு உரியவனாகான்;'  என்றான்-.

     கைகேயியை  மனைவி அல்லள் எனவும்,  பரதனை மகன் அல்லன்
எனவும் துறந்தான் தயரதன். அதை முனிவன்பால் அறிவித்தான். பகர்வான்,
இரங்காதாள் -வினையாலணையும் பெயர்கள். சொன்னேன் - உறுதிபற்றிய
கால வழுவமைதி.                                            49