கோசலையின் துயர்நிலை 1655. | ‘என்னைக் கண்டும் ஏகாவண்ணம் இடையூறு உடையான் உன்னைக் கண்டும் இலனோ?' என்றான், உயர் கோசலையை; பின்னைக் கண்தான் அனையான் பிரியக் கண்ட துயரம், தன்னைக் கண்டே தவிர்வாள்; தளர்வான் நிலையில் தளர்வாள். |
(தயரதன்) உயர்கோசலையை - உயர்ந்த கோசலையைப் பார்த்து;' என்னைக்கண்டும் ஏகாவண்ணம் இடையூறு உடையான் -என்னைப் பார்த்துப் போகாதவாறு இடையூறு உடையஇராமன்; உன்னைக்கண்டும் இலனோ? - உன்னையும் பார்த்துப் போகவில்லையோ;' என்றான்- ; பின்னை - பிறகு; கண்தான் அனையான்-தசரதனின் கண்ணை ஒத்த இராமன்; பிரியக் கண்ட துயரம்- தன்னைப்பிரியஅதனால் தயரதன்பால் ஏற்பட்ட துன்பத்தை; கண்டே - பார்த்து; தவிர்வாள் - (இராமனைக் கான் ஏகாதபடி தயரதன்பால் சொல்லித் தடுக்க வேண்டும் என்று எண்ணி வந்தகருத்தை) ஒழிவாளானாள்; தளர்வான் நிலையில் தளர்வாள் - சோர்கின்ற தயரதனைப்போலவே அவளும் சோர்வாளானாள். தந்தையைப் பார்த்துச் சொல்லிவிட்டுக் காடு ஏகுவதாயின் முடியாது. அச்செயல் இடையூறுபடும்என்று கருதி இராமன் தயரதனைப் பார்த்துச் சொல்லிக்கொள்ளாமல் சென்றான் என்பதுபற்றி ‘இடையூறு உடையான்' என்றார். இராமனைக் கான் ஏகாது தடுக்கும் தன்மை தயரதன்பால் இல்லை என்பதும், கைகேயி மாட்டே அது உள்ளது என்பதும் நிகழ்வுகளின் மூலம் அறிந்தாள் ஆதலின்வந்த கருத்தை ஒழித்துத் தயரதன் போலவே அவளும் தளர்வாளானாள். 1632 ஆம் பாடல்காண்க. 50 |