1657.‘தள்ளா நிலை சால் மெய்ம்மை
     தழுவா வழுவாவகை நின்று,
எள்ளா நிலை கூர் பெருமைக்கு
    இழிவுஆம் என்றால், உரவோய்!
விள்ளா நிலை சேர் அன்பால்
    மகன்மேல் மெலியின், உலகம்
கொள்ளாது அன்றோ' என்றாள்,
    கணவன் குறையக் குறைவாள்.

     ‘உரவோய்! - வலியவனே;  தள்ளா நிலை சால் மெய்ம்மை -
தவறக் கூடாததன்மை பொருந்திய சத்தியத்தை;  தழுவா - ஏற்று;
வழுவாவகை நின்று - அது சிறிதும் தவறுபடாத வகையில் நிலைத்து
நின்று;  என்னா  நிலைகூர்  பெருமைக்கு  இழிவு ஆம்என்றால் -
இகழப்படாத  தன்மை  பொருந்திய நினது  பெருந்தன்மைக்கு  இழிவை
உண்டாக்கும் என்றால்; விள்ளா  நிலை சேர் அன்பால் - விண்டுரைக்க
முடியாத தன்மை பொருந்தியகாதலால்; மகன்மேல் மெலியின் -
பிள்ளையைக் கருதித் தளர்ந்தால்;  உலகம்கொள்ளாது  அன்றோ -
உலகோர் அதனை ஏற்றுக் கொள்ளார்கள் அல்லவா;'  என்றாள் -என்று
சொல்லி;  கணவன் குறையக் குறைவாள் - கணவனாகிய தயரதன்
மெலிவடையத் தானும்மெலிவடைவாளானாள்.

     மகன்மேல் அன்பால் சத்தியம் தவறுதல், சத்தியம் தவறாமல் வரம்
கொடுத்த பிறகுமனம் தளர்தல் என்ற இரண்டில் ஒன்றே  செய்யத்தக்கது
என்றாள் கோசலை.  இதனுள் சத்தியம்தவறாமையே செய்யத்தக்கதாகலின்,
அதனைத் தளராது  செய்தலால் நாயகனது  இழப்பு உண்டாகுமே என்று
கருதிக் கோசலை  மேலும் அவன் போலவே தளர்வாளானாள்.        52