தயரதன் புலம்பல் 1659. | உணர்வான், அனையாள் உரையால், ‘உயர்ந்தான் உரைசால் குமரன் புணரான் நிலமே, வனமே போவானே ஆம்' என்னா; - இணர் ஆர்தரு தார் அரசன் - இடரால் அயர்வான்; ‘வினையேன் துணைவா! துணைவா' என்றான்; ‘தோன்றால், தோன்றாய்!' என்றான். |
இணர் ஆர்தரு தார் அரசன்- பூங்கொத்துகள் பொருந்திய மாலை அணிந்த தயரதமன்னன்; அனையாள் உரையால்- அந்தக் கோசலையின் வார்த்தையால்; ‘உயர்ந்தான் உரைசால் குமரன் - உயர்ந்தவனாகிய புகழ் பெற்ற இராமன்; நிலமேபுணரான் - நிலத்தை ஆள மாட்டான்; வனமே போவானே ஆம்! - காட்டிற்குப்போபவனே ஆவான்; என்னா - எனக் கருதி; இடரால் அயர்வான் - துன்பத்தால் சோர்கின்றவன்; ‘வினையேன் துணைவா! துணைவா' என்றான் - தீவினையேனாகிய என்னுடைய தோழனே தோழனே என்றான்; ‘தோன்றால்! தோன்றாய் - மகனே என்முன் வருவாயாக; என்றான் -. ‘துணைவா துணைவா' புலம்பலில் வந்த அடுக்கு. 54 |