1661. | ‘படைமாண் அரசைப் பல கால் பழுவாய் மழுவால் எறிவான், மிடை மா வலி தான் அனையான், வில்லால் அடுமா வல்லாய்! "உடைமா மகுடம் புனை" என்று உரையா, உடனே கொடியேன் சடை மா மகுடம் புனையத் தந்தேன்; அந்தோ!" என்றான். |
படைமாண் அரசை - சேனைகளினது மாட்சிமையுடைய அரசர்களை; பல கால் -இருபத்தொரு தலைமுறை; பழுவாய் மழுவால் - பழுக்கக் காய்ச்சிக் கூர்மையாக்கப்பட்டமழுப்படையால்; எறிவான் - வெட்டி அழித்தவனும்; மிடை மா வலி தான் அனையான் -செருக்கிய மிக்க பலத்தில் தன்னைத் தானே ஒத்தவனும் ஆகிய பரசுராமனை; வில்லால் அடுமாவல்லாய்! - வில்லாலே வெல்லும் ஆற்றல் வல்லவனே; (உன்னை) ‘உடைமா மகுடம் புனை' என்று உரையா - உன்னுடைய பெரிய முடியைச் சூடிக்கொள் என்று சொல்லி; உடனே-அப்பொழுதே; சடை மா மகுடம் புனையத் தந்தேன் அந்தோ' - சடையாகிய பெரியமகுடத்தை அணிந்துகொள்ளும்படி தந்துவிட்டேனே ஐயகோ; என்றான்- ‘நிருபர்க்கு ஒரு பழிபற்றிட (1275) என்ற பரசுராமப் படலப்பாடலில், ‘இருபத்தொரு படிகால்' என்று இந்நிகழ்ச்சி கூறப்பெறுதல் அறிக. ‘இருபத்தொருகால்அரசு களைகட்ட பரசுராமன், மேவரும் சாந்திமத்தீ வரண் கருதி இருத்தி்ய செம்பொன் திருத்தகுமுடியும்' என்னும் முதலாம் இராசேந்திரன் மெய்க்கீர்த்தியும் இதனைக் கூறும். அடுமா -அடுமாறு. 56 |