1666.‘அள்ளற் பள்ளப் புனல் சூழ்
     அகல் மா நிலமும், அரசும்,
கொள்ளக் குறையா நிதியின்
     குவையும், முதலா எவையும்,
கள்ளக் கைகேசிக்கே
     உதவி, புகழ் கைக்கொண்ட
வள்ளல்தனம் என் உயிரை
     மாய்க்கும்! மாய்க்கும்! என்றான்.

     அள்ளல் பள்ளப் புனல் சூழ் அகல் மா நிலமும் அரசும் -
குழைந்த சேறுடைய பள்ளங்கள் நிறைந்த நீரால் சூழப்பெற்ற அகன்ற
கோசல நாடும் ஆட்சியும்; கொள்ளக் குறையாநிதியின் குவையும் -
கொடுக்கக் குறைவுபடாத செல்வக் குவியலும்; முதலா எவையும்-மற்றுள்ள
எல்லாவற்றையும்;  கள்ளக் கைகேசிக்கே  உதவி - வஞ்சகமுள்ள
கைகேசிக்குக்கொடுத்து; புகழ் கைக்கொண்ட- புகழைப் பெற்றுக்கொண்ட;
வள்ளல்தனம் -உன்னுடைய உதாரகுணம்; என் உயிரை மாய்க்கும்
மாய்க்கும்' -
என் உயிரைப் போக்கடிக்கவல்லதாய் நின்றது; என்றான்-
.

     இராமனது வண்மைக் குணம் வெளிப்பட்டு, அது  மேலும் தயரதன்
மனத்தைப் பலம் இழக்கச்செய்கிறபடி. ‘மாய்க்கும்,  மாய்க்கும்'  புலம்பல்
அடுக்கு.  ‘ஏ' காரம் தேற்றம்.                                    61