1667.‘ஒலி ஆர் கடல் சூழ் உலகத்து,
     உயர் வானிடை, நாகரினும்,
பொலியா நின்றார் உன்னைப்
     போல்வார் உளரோ? பொன்னே!
வலி யார் உடையார்?' என்றான்;
     ‘மழுவாள் உடையான் வரவும்
சலியா நிலையாய் என்றால்,
     தவிர்வார் உளரோ' என்றான்.

     ‘பொன்னே! - பொன் போலச் சிறந்தவனே;  ஒலிஆர்  கடல்சூழ்
உலகத்து -
ஒலிக்கின்ற கடலாற் சூழப்பெற்ற இப்பூமியில்; உயர் வானிடை-
உயர்ந்தவிண்ணுலகத்தில்; நாகரினும் - நாகலோகமாகிய பாதலத்திடத்தும்;
பொலியாநின்றார் - சிறந்து  நின்றவர்கள்;  உன்னைப் போல்வார்
உளரோ? -
உன்னைஒத்தவர்கள் வேறு இருக்கின்றார்களோ?; ‘வலி
உடையார் யார்' என்றான்
- வலிமைஉடையவர்கள் யார் உளர் என்று
சொல்லி;  மழுவாள் உடையான் வரவும் - மழுப்படைஉடைய பரசுராமன்
வரவும்;  (அது கண்டு) சலியா நிலையாய் - (சிறிதும்) தளராத நிலை
உடையவனாய் இருந்தாய்; என்றால்-; தவிர்வார் உளரோ? - (நீ ஒன்று
செய்தால்)உன்னைச் செய்யாதே என்று தடுப்பார் இருக்கின்றார்களா;'
என்றான்-.

     மிக்க வலியுடையவர்கள் தம் விருப்பம்போலச் செய்ய இயலும்.
அவர்களைத் தடுக்க வல்லவர்யாரும் இலர். ஆதலின், என் நிலை கருதி
‘இராமா! நீ வனம் போகாதிருப்பின் உன்னை யாரால்தடுக்க முடியும்'
என்று  குறிப்பால் வினாவிப் புலம்பினன் தயரதன்.                  62