1668.‘கேட்டே இருந்தேன் எனினும்,
     கிளர் வான் இன்றே அடைய
மாட்டேன் ஆகில் அன்றோ,
     வன்கண் என்கண்? மைந்தா!
காட்டே உறைவாய் நீ! இக்
     கைகேசியையும் கண்டு, இந்
நாட்டே உறைவேன் என்றால்,
     நன்று என் நன்மை!' என்றான்.

    ‘மைந்தா! - இராமா!; கேட்டு இருந்தேன்எனினும் - நீ காட்டுக்குச்
செல்வதைக் கேட்டுவைத்தும் இங்கிருந்தேன் ஆனாலும்;  கிளர்வான்-
ஒளிபடைத்தவானுலகத்தை; இன்றே அடையமாட்டேன்ஆகில்
அன்றோ -
இன்றைக்கே சென்று சேராமல்இருந்தால் அல்லவா; என்கண்
வன்கண் -
என்னிடம் கொடுமைத்தன்மை உளதாகும்;நீ காட்டே உறைவாய் - நீ வனத்தில் வசிப்பாய்;இக்
கைகேசியையும் கண்டு-
இந்தக் கைகேயியையும் பார்த்துக்கொண்டு;
இந்நாட்டே உறைவேன் என்றால்-இந்த நாட்டிலேயே(நான்) வசிப்பேன்
ஆனால்; என் நன்மை நன்று - எனதியல்புநன்றாயிருந்தது;'என்றான்-

     ‘இன்றே' ‘ஏ'காரம் தேற்றம். கேட்டே ஏகாரம் சிறப்பு. காட்டே, நாட்டே
ஏகாரங்கள்அசை. நன்று இகழ்ச்சிக் குறிப்பு.                        63