மன்னனைத் தேற்றி வசிட்டன் சொல்லுதல்  

1671.ஒன்றோடு ஒன்று ஒன்று ஒவ்வா
    உரை தந்து, அரசன், ‘உயிரும்
சென்றான் இன்றோடு’ என்னும்
    தன்மை எய்தித் தேய்ந்தான்,
மென் தோல் மார்பின் முனிவன்.
    ‘வேந்தே! அயரேல்; அவனை,
இன்று ஏகாத வண்ணம்
    தகைவென் உலகோடு' என்னா.

     அரசன் - தயரத மன்னன்;  ஒன்றோடு  ஒன்று  ஒன்று  ஒவ்வா
உரை தந்து -
ஒன்றுக்கொன்று  தொடர்பில்லாமல் புலம்பி;  ‘உயிரும்
இன்றோடு சென்றான்’  என்னும்தன்மை எய்தித் தேய்ந்தான் -
உயிரும் இன்றோடு போகப் பெற்றான் என்கின்ற  நிலைஅடைந்து
அழிந்தான்;  மேன் தோல் மார்பின் முனிவன் - மெல்லிய தோல்
போர்த்திய மார்பினை உடைய வசிட்டன்; ‘வேந்தே - தசரத மன்னனே;
அயரேல் -சோர்வடையாதே;  அவனை - இராமனை; இன்று -
இன்றைக்கு;  ஏகாத வண்ணம் -காடு செல்லாதபடி;  உலகோடு
தகைவென்’ -
நாட்டு மக்களோடு சேர்ந்து தடுப்பேன்; என்னா - என்று.

     தானே சென்று சொன்னால் இராமனைத் தடுத்தல் இயலாது என்பதால்
‘உலகோடு சென்றுதகைவென்’ என்றான்.                          66