தயரதன் கோசலைபால் ‘இராமன் வருவானா’ எனக் கேட்டு வருந்தல்  

1675.என்று என்று, அரசன் மெய்யும்,
     இரு தாள் இணையும், முகனும்,
தன்தன் செய்ய கையால்
     தைவந்திடு கோசலையை,
ஒன்றும் தெரியா மம்மர்
     உள்ளத்து அரசன், மெள்ள,
‘வன் திண் சிலை நம் குரிசில்
     வருமே? வருமே?’ என்றான்.

     என்று என்று -  என இவ்வாறு கூறி;  அரசன்  மெய்யும் -
அரசனது உடம்பையும்;  இருதாள் இணையும் முகனும் தன்தன் செய்ய
கையால் தைவந்திடு கோசலையை
-இரண்டு அடிகளையும்  முகத்தையும்
தன்னுடைய சிவந்த கைகளால் தடவிக் கொடுக்கின்ற கோசலையைப்பார்த்து;
ஒன்றும் தெரியா மம்மர் உள்ளத்து அரசன் - ஒரு செய்தியும் அறியாது
மயங்கிய மனம் உடைய தசரதன்; மெள்ள - மெதுவாக; ‘வன் திண் சிலை
நம் குரிசில்வருமே? வருமே? -
வலிய கட்டமைந்த வில்லை  உடைய
நம்முடைய இராமன் வருவானா,  வருவானா;’ என்றான்-.

     தன்தன் எதுகை நோக்கிய அடுக்கு. ‘வருமே வருமே’ அடுக்கு.     70