தசரதன் கோசலையிடம் தன் பழைய சாப வரலாறு கூறல் 1677. | ‘பொன் ஆர் வலயத் தோளான், கானோ புகுதல் தவிரான்; என் ஆர் உயிரோ அகலாது ஒழியாது; இது, கோசலை கேள்; முன் நாள், ஒரு மா முனிவன் மொழியும் சாபம் உளது’ என்று, அந் நாள் உற்றது எல்லாம் அவளுக்கு அரசன் அறைவான். |
‘கோசலை! - கோசலையே; பொன் ஆர் வலயத் தோளான் - பொன்னாற்செய்யப் பெற்ற வாகுவலயம் அணிந்த தோளை உடைய இராமன்; கான் புகுதல் தவிரான் -காட்டிற் செல்லுதலைக் கை விடான்; என் ஆர் உயிரோ அகலாது ஒழியாது - என்னுடையஅரிய உயிரோ போகாமல் நிற்காது; இது கேள் - இதனைக் கேட்பாயாக; ‘ஒருமா முனிவன் முன்நாள் மொழியும் சாபம் உளது’ என்று - ஒரு சிறந்த தவசி முன்னொரு காலத்து(என்னை நோக்கிக்) கூறிய சாபம் உண்டு’ என்று; அந்நாள் உற்றது எல்லாம் - அந்தநாளில் நடந்த நிகழ்ச்சிகள் எல்லாவற்றையும்; அவளுக்கு - அந்தக் கோசலையிடம்; அரசன் - தயரதன்; அறைவான் - கூறுவான் ஆனான். இராமன் காடு செல்வதும் தயரதன் உயிர் போவதும் நிச்சயம் நிகழ்ந்தே தீரும் முன்னாளையசாப வரலாறு உறுதிப்படுத்துவது ஆதலின் அதனைக் கோசலைக்குக் கூறலாயினன். ‘கானோ’ ‘ஓ’ காரம்தெரிநிலை. அகலாது ஒழியாது இரண்டு எதிர்மறைகள் கூடி ‘அகலும்’ என்ற உடன்பாட்டுப் பொருள்தந்தன. ‘உற்றது எல்லாம்ழு ஒருமை பன்மை மயக்கம். ‘உற்றவை’ என வரல் வேண்டும். “எல்லாம் என்னும் பெயர் நிலைக் கிளவி, பல்வழி நுதலிய நிலைத் தாகும்மே” என்பது தொல்காப்பியம். (தொல். சொல். 188) ‘அவளுக்கு’ ‘அவளிடம்ழு என்று ஏழாவதன்கண் நான்காவது வந்த உருபு மயக்கம். முனிவன் - சல போசனன் (நீரையே ஆகாரமாக உடையவன்). 72 |