1678. | ‘வெய்ய கானத்திடையே, வேட்டை வேட்கை மிகவே, ஐய, சென்று, கரியோடு அரிகள் துருவித் திரிவேன், கையும் சிலையும் கணையும் கொடு, கார் மிருகம் வரும் ஓர் செய்ய நதியின் கரைவாய்ச் சென்றே மறைய நின்றேன். |
‘வேட்டை வேட்கை மிக - வேட்டையாடுதலில் விருப்பம் மேற்செல்ல; வெய்யகானத்திடையே சென்று - கொடிய காட்டின்கண் போய்; ஐய கரியோடு அரிகள் துருவித்திரிவேன் - அழகிய யானையோடு சிங்கங்களைத் தேடிச் சுற்றுகின்ற யான்; கார் மிருகம்வரும்- கரிதான விலங்காகிய யானை முதலிய வருகின்ற; ஓர் செய்ய நதியின் கரைவாய்- ஒரு துறையொழுங்கு உடைய ஆற்றின் கரைக்கண்; கையும் சிலையும் கணையும் கொடு - கையில் வில்லும் அம்பும் கொண்டு; சென்று மறைய நின்றேன் - சென்று மறைவாகநின்றேன். ஐய - அழகாக எனப் பொருள்படும், வளர்ச்சியாலும் வனப்பாலும் வியப்புத்தரும் எனலுமாம்.கார் மிருகம் - யானை, செய்ய நதி - துறை ஒழுங்கு இங்கே ஆற்றுக்குச் செம்மை. அதனால்மனிதரும் தண்ணீர் எடுக்க வசதியான ஆறு எனல் ஆகும். ‘ஏ’ இரண்டும் அசை. 73 |