1681. | ‘கையும் கடனும் நெகிழக் கணையோடு உருள்வோற் காணா, மெய்யும் தனுவும் மனனும் வெறிது ஏகிட, மேல் வீழா, ‘ஐய! நீதான் யாவன்? அந்தோ! அருள்க” என்று அயர, பொய் ஒன்று அறியா மைந்தன், “கேள் நீ ” என்னப் புகல்வான். |
‘கையும்கடனும் நெகிழ - கையும் குடமும் நெகிழ்ந்து விலக; கணையோடுஉருள்வோன் காணா - அம்போடு தரையில் உருளுகின்ற முனிமகனைக் கண்டு; மெய்யும் தனுவும்மனனும் வெறிது ஏகிட- (என்) உடலும் வில்லும் மனமும் வெறுமையாகிச் செல்ல; மேல்வீழா- மேலே விழுந்து; ‘அந்தோ! - ஐயோ; ஐய!- ஐயனே; நீ தான்யாவன் -நீ யார்; அருள்க’ - சொல்வாயாக;’ என்றுஅயர - என்றுகேட்டுச் சோர்வடைய; பொய் ஒன்று அறியா மைந்தன் -சத்தியவாக்கினன் ஆகிய அம் முனி மகன்; ‘நீ கேள்ழு எனப் புகல்வான்-நீஇதனைக் கேள் என்று தன் வரலாற்றைச் சொல்வானாயினன்.’ தான் செய்த தவறால் உள்ளீடற்று மனமும் உடலும் வெறுமையானது என்றானாம். வில் கீழேவிழுந்து விட்டதாகலின் வெறுமையானது. கடம் - கடன் போலி; மனன் - மனம்; இதுவும் போலி. 76 |