1684. | ‘மைந்தன் வரவே நோக்கும், வள மாதவன் பால், மகனோடு அம் தண் புனல் கொண்டு அணுக, “ஐயா, இதுபோது அளவாய் வந்து இங்கு அணுகாய்; என்னோ வந்தது? என்றே, நொந்தேம்; சந்தம் கமழும் தோளாய், தழுவிக் கொள வா" எனவே. |
‘மைந்தன் வரவே நோக்கும் - மகனது வருகையையே எதிர் பார்த்துக்கொண்டிருக்கின்ற; வள மாதவன்பால் - மிக்க தவத்தை உடைய முனிவனிடம்; மகனோடு - (இறந்த) மகனோடு; அம் தண்புனல் கொண்டு அணுக - அழகிய குளிர்ந்த நீரை எடுத்துக் கொண்டு நெருங்கிச் செல்ல; ‘ஐயா! - மகனே; இது போது அளவாய் -இவ்வளவு நேரமாய்; வந்து இங்கு அணுகாய் - இங்கு வந்து சேராமையால்; என்னோ வந்தது? - உனக்கு என்ன நேர்ந்ததோ; என்றே - என்று நினைத்து; நொந்தேம்- வருந்தினோம்; சந்தம் கமழும் தோளாய்! - சந்தனம் மணக்கின்ற தோளைஉடைய மகனே; தழுவிக் கொள வா’ - நாங்கள் தழுவிக் கொள்ளும்படி (அருகில்) வா; என - என்று சொல்லி. தசரதன் இறந்த மகன் உடலை எடுத்துக்கொண்டு தண்ணீருடன் கண் இழந்த முனி தம்பதிகளைஅணுக, அவர்கள் தம் மகன் வந்ததாகவே கருதினர் என்பது இதனால் விளங்கும். ‘ஏ’ ஈற்றசை. 79 |