1688.‘வீழ்ந்தார்; அயர்ந்தார்; புரண்டார்;
     “விழி போயிற்று, இன்று” என்றார்;
ஆழ்ந்தார் துன்பக் கடலுள்;
     “ஐயா! ஐயா!” என்றார்;
“போழ்ந்தாய் நெஞ்சை” என்றார்;
     “பொன்நாடு அதனில் போய், நீ
வாழ்ந்தே இருப்பத் தரியேம்;
     வந்தேம்! வந்தேம்! இனியே.”

     (மகன் இறந்தான் என்பது கேட்ட அவ் இரு முதுகுரவரும்) ‘வீழ்ந்தார்
அயர்ந்தார்புரண்டார் -
தரையில் விழுந்து  சோர்வு அடைந்து
புரண்டார்கள்;  ‘இன்று விழிபோயிற்று’ என்றார் - இன்றைக்கு எங்கள்
கண்கள் போயின என்றார்; துன்பக் கடலுள்ஆழ்ந்தார் - துன்பம் எனும்
பெருங்கடலுள் மூழ்கினர்; ‘ஐயா! ஐயா’ என்றார் -(மகனை நினைத்து)
ஐயனே ஐயனே என்றார்; ‘நெஞ்சைப் போழ்ந்தாய்’ என்றார் -(எங்கள்)
மனத்தைப் பிளந்துவிட்டாய் என்றார்;  ‘நீ  பொன்நாடு அதனில் போய்
வாழ்ந்தே இருப்பத் தரியேம்’ -
நீ பொன்னுலகம் சென்று  அங்கு
வாழ்ந்து  இருப்ப நாங்கள்தனித்திருக்க மாட்டேம்;  இனியே  வந்தேம்,
வந்தேம் -
இப்பொழுதே வந்துவிட்டோம்,  வந்து விட்டோம்  (என்ற
புலம்பினர்.)

     இறந்த மகனின் பெற்றோர்கள் புலம்பினர். இனி ஒரு செயலும் செய்ய
இயலாதவர்களாகஆனோம்  என்பது  கருத்து.                     83