1691. | ‘ “ தாவாது ஒளிரும் குடையாய்! ‘தவறு இங்கு இது; நின் சரணம், காவாய்’ என்றாய்; அதனால், கடிய சாபம் கருதேம்; ஏவா மகவைப் பிரிந்து, இன்று எம்போல் இடர் உற்றனை நீ போவாய், அகல் வான்” என்னா, பொன் நாட்டிடை போயினரால். |
‘தாவாது ஒளிரும் குடையாய்! - கெடாது ஒளிவீசும் வெண்குடை வேந்தே; ‘இங்குஇது தவறு, நின் சரணம், காவாய்’ என்றாய்- இங்கு நான் செய்த இச்செயல் என் தவறே,நின் திருவடியைப் புகலாக அடைந்தேன், என்னைக் காப்பாற்று என்று சொன்னாய்; அதனால்- (குற்றத்தை ஒப்புக்கொண்டு) சரணம் அடைந்தமையால்; கடியசாபம் கருதேம் -கொடிய சாபம் கொடுக்கக் கருதவில்லை; ஏவாமகவைப் பிரிந்து - கட்டளை இடவேண்டாது குறிப்பறிந்து செய்யும் நன்மகனைப் பிரிந்து; இன்று எம்போல் - இன்று நாங்கள்துன்பப்படுவதுபோல்; இடர் உற்றனை - துன்பம் அடைந்தனையாய்; நீஅகல் வான்போவாய் - நீ அகன்ற வானத்தை அடைவாய்; என்னா- என்று சாபம் தந்து; பொன் நாட்டிடைபோயினர் - விண்ணுலகம் சென்றார்கள். ‘கடிய சாபம்’ என்பது ‘பிள்ளை இறக்க’ என்று சொல்லாமல், பிள்ளை பிரிய என்றுசொல்லியது கருதி. ‘எம்போல்’ என்றாலும், பிள்ளை இறப்பதை நீக்கிய உவமை; நாங்கள் உயிர்துறப்பது போல் நீயும் உயிரிழப்பாய் என்று சுட்டும் அளவில் நின்றது. ‘ஆல்' ஈற்றசை. 86 |