வசிட்டன் அரசவை அடைதல் கலிவிருத்தம் 1693. | உரை செய் பெருமை உயர் தவத்தோர் ஓங்கல், புரைசை மத களிற்றான் பொற் கோயில்முன்னர், முரைசம் முழங்க, முடி சூட்ட மொய்த்து, ஆண்டு அரைசர் இனிது இருந்த நல் அவையின் ஆயினான். |
உரைசெய் பெருமை - புகழப்படும் பெருமை உடைய; உயர் தவத்தோர் ஓங்கல் - உயர்ந்த முனிவர்களுக்கெல்லாம் மலைபோல உயர்ந்த வசிட்டன்; புரைசை மத களிற்றான்பொன் கோயில் மன்னர்- மணிகட்டிய கயிற்றை உடைய மத யானையை உடைய மன்னனது அரண்மனைமுன்றிலில்; முரைசம் முழங்க - முரச வாத்தியம் ஒலிக்க; முடி சூட்ட மொய்த்து- இராமனுக்குப் பட்டாபிடேகம் செய்ய நெருங்கி; ஆண்டு - அவ்விடத்தே; அரைசர் - மன்னர்கள்; இனிது இருந்த நல் அவையின் ஆயினான் - இனிமையாக வீற்றிருந்த நல்லசபாமண்டபத்தை வந்து அடைந்தான். இராமனது முடிசூட்டு விழாவை முன்னிட்டு மன்னர்கள் நெருங்கியிருந்த அத்தாணி மண்டபத்துக்குவசிட்டன் வந்து சேர்ந்தான். முன்பே அரசர்கள் கோசலையின் புலம்பல் கேட்டு ‘அவ் ஆறுஅறிவாய் ’ என்ன முனிவன் வந்தவன் ஆதலின், (1639.) அவர்களுக்குச் செய்தி அறிவிக்கச்சென்று சேர்ந்தான் என்க. புரசை என்பது எதுகை நோக்கி‘ புரைசை’ என நின்றது. யானைக்கழுத்தில் இடும் கயிறு என்பது பொருள். முரசம் - முரைசம் போலி. 88 |