அரசர் முனிவனைக் கேட்டல்  

1694.வந்த முனியை முகம் நோக்கி,
     வாள் வேந்தர்,
‘எந்தை! புகுதற்கு இடையூறு
     உண்டாயதோ?
அந்தம் இல் சோகத்து அழுத
     குரல்தான் என்ன?
சிந்தை தெளிந்தோய்! தெரி எமக்கு ஈது’
     என்று உரைத்தார்.

     வாள் வேந்தர் - வாள் உடைய அரசர்;  வந்த முனியை முகம்
நோக்கி
-வந்த வசிட்டனைப் பார்த்து;  ‘சிந்தை தெளிந்தோய்! - மனம்
தெளிந்த மாமுனிவனே; எந்தை! - எம் தந்தை போல்பவனே;  புகுதற்கு
இடையூறு  உண்டாயதோ?
- இராமன்முடிசூட்டு விழாவிற்கு வருதற்கு
ஏதேனும் தடை உண்டாகியதா; அந்தம் இல் சோகத்து அழுதகுரல்தான்
என்ன?
- முடிவில்லாத துன்பத்துடன் கூடிய அழுகையொலி எதனால்
ஆகியது;  எமக்குஈது  தெரி’ -  எங்களுக்கு இதனைத் தெரிவிப்பாயாக;’
என்று  உரைத்தார் -.

     இங்கே ‘எந்தை’ என்பதை முனிவனை நோக்கிய விளியாக ஆக்காமல்,
தயரதன் என்றோ,‘இராமன் என்றோ பொருள் உரைத்து,  முடிசூட்டு
விழாவிற்கு தயரதன் வந்து  சேர’  அல்லது ‘இராமன் வந்து சேர’ தடை
உண்டாகியதா  என்று அரசர் வினாவியதாகக் கொள்வதும் நேரிய
உரையேயாகும்.  முடி சூடிய பின்னர் இராமன் மன்னர்  மன்னன்
ஆகிவிடுவான் ஆதலின், அதுபற்றிஅரசர் இராமனை ‘எம் தலைவன்’
எனும் பொருளில்  ‘எந்தை’ என வழங்கல் முறையே ஆகும்.          89

வசிட்டன் நடந்தவை உரைத்தல்