1695. | ‘கொண்டாள் வரம் இரண்டு, கேகயர்கோன் கொம்பு; அவட்குத் தண்டாத செங்கோல் தயரதனும்தான் அளித்தான்; “ஓண் தார் முகிலை வனம் போகு” என்று, ஒருப்படுத்தாள்; எண்தானும் வேறு இல்லை; ஈது அடுத்தவாறு’ என்றான். |
‘கேகயர் கோன் கொம்பு - கேகய நாட்டு அரசன் மகளாகிய கைகேயி; இரண்டுவரம் கொண்டாள் - இரண்டு வரங்களைப் (தசரதன்பால்) பெற்றுக் கொண்டாள்; தண்டாதசெங்கோல் - தடைபடாத செங்கோலாட்சியிற் சிறந்த; தயரதனும்தான் - தயரதமன்னனும்; அவட்கு- கைகேயிக்கு; அளித்தான்- (அவ்வரங்களைக்)கொடுத்தான் (அவ்வரங்களில் ஒன்றால்); ‘ஒண்தார் முகிலை வனம் போகு’ என்று ஒருப்படுத்தாள் - ஒள்ளிய மாலை அணிந்த மேகம் போன்ற இராமனைக் காட்டிற்குச் செல்’ என்று சொல்ல (அரசனை) உடன்பட வைத்தாள்; எண் தானும் வேறு இல்லை - எண்ண வேண்டிய வேறு துன்பம் ஏதும் இல்லை; அடுத்த ஆறு ஈது’ - நடந்த நிகழ்ச்சி இதுவே; என்றான்- ‘கொம்பு’ உவமையால்கைகேயியை உணர்த்திற்று. இராமன் வனம் போகின்ற வரத்தை’முதலில் கொண்டதாக முனிவன் அரசவைக்குக் குறிப்பிட்டதில் ஒரு நயம் உண்டு. இராமன் காடுசென்று விடின் மிகுந்து நிற்போருள் மூத்தவன் பரதனே ஆதலின், இயல்பாகவே அவனுக்கு நாடாளும்உரிமையை உண்டாக்கிவிடுதலின். இதனையே கைகேயி மனம் திரிக்க வந்த மந்தரையும் முன்னர், ‘மூத்தவற்கு உரித்து அரசு எனும் முறைமையின் உலகம், காத்த மன்னனின் இளையன் அன்றோ கடல் வண்ணன், ஏத்தும் நீள்முடி புனைவதற்கு இசைந்தனன் என்றால், மீத்தரும் செல்வம் பரதனைவிலக்குமாறு எவனோ’ (1475) என்று கேட்டாள். தயரதன் முதியவன், மூத்தவன், அவன் தவம்செய்ய வனம் சென்றால், அவனிலும் இளையனாகிய இராமன் ஆட்சி உரிமை அடைவான் எனில், இராமன் வனம் புகுமாறு செய்யப்பெற்றால் பரதன் ஆட்சியுரிமை எய்துவதில்தடை என்ன என்பது மந்தரையின் வாதம். அதை ஒட்டியே இங்கே வசிட்டனும் மன்னர் பேரவைக்கு இராமன் வனம் புகு வரத்தை முன்னர் அறிவித்ததாக அமைந்திருப்பது அறிந்து இன்புறத்தக்கது. 90 |