1699.மாதர் அருங் கலமும்
     மங்கலமும் சிந்தி, தம்
கோதை புடைபெயர,
     கூற்று அனைய கண் சிவப்ப,
பாத மலர் சிவப்ப,
     தாம் பதைத்துப் பார் சேர்ந்தார் -
ஊதை எறிய
     ஒசி பூங் கொடி ஒப்பார்.

     மாதர்தாம் - மகளிர்; அருங்கலமும்  மங்கலமும்  சிந்தி - அரிய
அணிகலன்களும் மங்கலநாணும் கீழே விழ;  தம் கோதை புடை பெயர -
தம்முடைய கூந்தல்பக்கத்தில்  குலைந்து விழ;  கூற்று  அனைய கண்
சிவப்ப
- யமனை ஒத்த கண்கள்சிவக்க; பாதமலர் சிவப்ப - அடிமலர்
சிவக்க;  ஊதை எறிய - பெருங்காற்று வீசுவதனால்;  ஒசி - ஒடிந்து
வீழ்கின்ற; பூங்கோடி ஒப்பார் - பூங்கொடியைஒத்தவர்களாய்; பதைத்துப்
பார் சேர்ந்தார்
- துடித்துப் பூமியில் விழுந்தார்கள்.

     ‘பூங்கொடி’  இயல்பில் மெல்லிய மகளிர்க்கு உவமை. இங்கே ‘ஊதை
எறிய’ என்றபடியால், துயர நிலையில் துடித்துத் தரையில்  வீழும்
பெண்களுக்கு  உவமை ஆயிற்று.                                94