1701. | கிள்ளையொடு பூவை அழுத; கிளர் மாடத்து - உள் உறையும் பூசை அழுத; உரு அறியாப் பிள்ளை அழுத; பெரியோரை என் சொல்ல? - ‘வள்ளல் வனம் புகுவான் ’ என்று, உரைத்த மாற்றத்தால். |
வள்ளல் - இராமன்; ‘வனம் புகுவான் - காடு செல்வான்;’ என்று உரைத்த மாற்றத்தால் - என்று சொல்லிய சொல்லால்; கிள்ளையொடு பூவை அழுத -கிளியும், நாகணவாய்ப் பறவையும் அழுதன; கிளர் மாடத்து உள் உறையும் பூசை அழுத -விளங்குகின்ற மாளிகையின் உள்ளே வசிக்கின்ற வீட்டுப் பூனைகள் அழுதன; உரு அறியாப்பிள்ளை அழுத - வடிவத்தைப் பார்த்து அறிய மாட்டாத சிறு குழந்தைகள் அழுதன; பெரியோரை என் சொல்ல? - பெரியோர்கள் அழுதமைமையப் பற்றி என்னவென்று சொல்வது? அஃறிணைப் பொருள்களும் இராமன் பிரிவால் துயர் உறுவனவாகச் சொல்கிறார். ‘ உரு அறியாப் பிள்ளை’ கருவில் இருக்கும் வடிவு காணாத குழந்தைகளும் அழுதன என்று துக்கத்தின் உச்சநிலையைக் காட்டிப் பொருள் உரைப்பினும் அமையும். இவையே இவ்வாறாயினமையின் பெரியோர்கள்அழுதமைபற்றிச் சொல்ல வேண்டுவதில்லை. 96 |