1702. | சேதாம்பல் போது அனைய செங் கனி வாய் வெண் தளவப் போது ஆம் பல் தோன்ற, புணர் முலைமேல் பூந் தரளம் மா தாம்பு அற்றென்ன மழைக் கண்ணீர் ஆலி உக, நா தாம் பற்றா மழலை நங்கைமார் ஏங்கினார். |
நாதாம் பற்றா மழலை நங்கைமார் - நாவின் கண் பிடிப்புப் பொருந்தாத மழலைச்சொற்களைப் பேசுகின்ற இனிய இளமகளிர்; சேதாம்பல் போது அனைய செங்கனிவாய் -செவ்வல்லிப்பூவை ஒத்த சிவந்த பழம் போன்ற வாயிலிருந்து; வெண் தளவப் போதுஆம்பல் தோன்ற - வெண்மையான முல்லையின் மலர் அரும்பு ஆகிய பல் வெளித் தெரிய; புணர்முலைமேல் - இரண்டாகச் சேர்ந்தமார்பகங்களின் மேல்; மழைக் கண்ணீர் ஆலி -மழை போன்ற கண்ணீர்த்துளி; பூந்தரளம்- அழகிய முத்து; மா தாம்பு அற்று என்ன - சிறந்தகயிறுஅறுந்து ஒவ்வொன்றாக விழுவது போல; உக - சிந்த; ஏங்கினார்- அழுதார்கள். எழுத்து விளங்காத மழலைப் பேச்சு என்பார் ‘நா தாம் பற்றா மழலை’ என்றார். ‘ வாயில்பல் வெளித் தோன்ற அழுதார்’ என்பது அவலத்தின் உச்சம். இளமகளிர் நாணத்தாற் சிறந்தவர்ஆதலின் பல் வெளித் தோன்ற நகுதலும் செய்யார், இன்று பல் வெளித் தோன்ற அழுகின்றனர்என்பதாம். இதனை இவள் மன்னும் ஒள்நுதல் ஆயத்தார் ஓராங்குத் திளைப்பினும்; முன்நுனைதோன்றாமை முறுவல் கொண்டு அடக்கித் தன், கண்ணினும் முகத்தினும் நகுபவள்; பெண் இன்றி, யாவரும் தண் குரல் கேட்ப நிரை வெண்பல் மீயுயர் தோன்ற நகா அ நக்காங்கே, .....உண்கண்ஆயிதழ் மல்க அழும ’் என்னும் (கலித். 142. 6 -12) பாடற் பகுதி கொண்டு விளங்க அறிக. கழுத்தில் அணிந்த முத்துவடக் கயிறு அறுந்து ஒவ்வொரு முத்தாக மார்பில் விழுவது போலக்கண்ணீர்த் துளி முலைத்தலை வீழ்கிறது என்றார். 97 |