1704. | ஞானீயும் உய்கலான் என்னாதே, நாயகனைக் ‘கான் ஈயும் ’ என்று உரைத்த கைகேசியும், கொடிய கூனீயும் அல்லால், கொடியார் பிறர் உளரோ? - மேனீயும் இன்றி, வெறு நீரே ஆயினார். |
‘ஞானீயும்உய்கலான்’என்னாதே - உலகில் பிறந்தார்க்குப் பிரிவும் சிறப்பும் இயல்பானவை என்பதைத் தெளிய உணர்ந்த ஞானியும்கூட இராமன் பிரிவால் பிழைக்க மாட்டான் என்று கருதாமல்; நாயகனைக்‘கான் ஈயும்’ என்று உரைத்த கைகேசியும் - தன் கணவனைப் பார்த்து (இராமனுக்குக்) காட்டைக் கொடும் என்று சொல்லிய கைகேயியும்; கொடியகூனீயும் அல்லால் - அவளுக்குத் துர்ப்போதனை செய்த கூனியும் தவிர; பிறர் கொடியார் உளரோ? - வேறு யாரேனும் மிகக் கொடியவர்கள் இருக்கின்றார்களோ (மற்றவர்கள் அனைவரும்); மேனீயும் இன்றி - உடம்பும் இல்லாமல்; வெறுநீரே ஆயினார் - வெறுமைத் தன்மை அடைந்தவர் ஆயினர். ‘கான் ஈயும்’ என்பதற்கு ஏற்ப, ஞானி, கூனி, மேனி என்ற இகரங்கள் நீண்டன எதுகை நயம் பற்றி. ‘ஞானியே உய்கலான்’ என்றால் மற்றவர் நிலை சொல்லவேண்டுவதில்லை என்றபடி. |