1705.

தேறாது அறிவு அழிந்தார்
     எங்கு உலப்பார்? தேர் ஓட
நீறு ஆகி,  சுண்ணம்
    நிறைந்த தெரு எல்லாம்,
ஆறு ஆகி ஓடின
    கண்ணீர்;  அரு நெஞ்சம்
கூறு ஆகி ஓடாத
   இத்துணையே குற்றமே.

     (இராமனதுபிரிவால்) தேறாது - தெளியாமல்;  அறிவுஅழித்தார் - அறிவு நீங்கப் பெற்றவர்கள்;  எங்குஉலப்பார்? - எவ்விடத்து எந்நிலைமையால் கணக்கில் அடங்குவர்;  தேர் ஓட நீறு ஆகிச் சுண்ணம் நிறைந்த தெரு எல்லாம் - தேர் ஓடுவதனால் புழுதிஆகி மண் பொடி நிறைந்திருந்த தெருக்களில் எல்லாம்;  கண்ணீர் - மக்கள் அழுத கண்ணீர்;  ஆறு ஆகி ஓடின - ஆறு போலச் சென்று ஓடின;  அருநெஞ்சம் - அவர்களது  அரிய மனம்;  கூறுஆகி ஓடாத இத் துணையே குற்றம் - பிளந்து  பிரிந்து  நீங்காத இவ்வளவேகுற்றம்.

     துயரத்தால்அறிவு மயங்கியவர்கள் கணக்கில் அடங்கார் என்பதை ‘எங்கு உலப்பார்’ என்று குறித்தார்.புழுதி நிறைந்த தெரு ஆறாகிவிட்டது  என்றால் கண்ணீரின் பெருக்கத்தை அறிய முடிகிறது. நெஞ்சம் பிளந்து  ஓடியதைப் பார்க்க முடியவில்லையே தவிர மற்றவை எல்லாம் நடந்து முடிந்துவிட்டன என்பார் இத்துணையே குற்றம் ’ என்றார்.   ‘ஏ’ காரம் ஈற்றசை.                                             100