1708. | ‘ஆதி அரசன், அருங் கேகயன் மகள்மேல் காதல் முதிர, கருத்து அழிந்தான் ஆம்’ என்பார்; ‘சீதை மணவாளன் தன்னோடும் தீக் கானம் போதும்; அது அன்றேல், புகுதும் எரி’ என்பார். |
‘ஆதி அரசன் - மூல முதல் வேந்தனான தயரதன்; அருங்கேகயன் மகள்மேல் -அரிய கைகேயிமாட்டு; காதல்முதிர - அன்பு முற்றுதலால்; கருத்து அழிந்தான் ஆம்- மனம் மயங்கிஅறிவு தடுமாறிவிட்டான்போலும்;’ என்பார்-; ‘சீதை மணவாளன்தன்னோடும் தீக்கானம் போதும் - (நாம்) சீதைக்கு நாயகனான இராமனோடு கொடிய காட்டிற்குப் போவோம்; அது அன்றேல் -அது முடியாமற் போகுமானால்; எரி புகுதும் - நெருப்பில் வீழ்ந்து உயிர்விடுவோம்;’ என்பார் - . ஆதி அரசன் - தசரதன், பிரதான மன்னன் என்பதாம். “ஆதி மன்னனை ஆற்றுமின்நீர்” என்று (1837.) வருதல் காண்க. 103 |