1713. | ‘என்னே, நிருபன் இயற்கை இருந்தவா! தன் நேர் இலாத தலைமகற்குத் தாரணியை முன்ன கொடுத்து, முறை திறம்பத் தம்பிக்குப் பின்னே கொடுத்தால் பிழையாதோ மெய்?’ என்பார். | ‘நிருபன்- சக்கரவர்த்தியின்; இயற்கை இருந்தவா என்னே!- இயல்பு இருந்த விதம் என்னவாய்உள்ளது; தன் நேர் இல்லாத தலைமகற்குத் தாரணியை முன்னே கொடுத்து -தனக்குச்சமானமில்லாத மூத்த மகனுக்குப் பூமியை முன்னர் ஆளக் கொடுப்பதாக அவையில் சொல்லிவிட்டு; முறை திறம்ப - அச் சொல் முறை மாறு்படும்படி; பின்னே - பிறகு (கைகேயியின்அந்தப்புரத்தில்); தம்பிக்குக் கொடுத்தால்- பரதனுக்குக் கொடுத்தால்; மெய் பிழையதோ?’ - சத்தியம் தவறுபடாதோ;’ என்பார் -. நகர மாந்தர் அவல மனநிலையினும் இராமன்பால் கொண்ட அன்பின் மனநிலையினும்எழுந்ததாயினும். இஃது ஓர் அரிய வாதம். வரம் கொடுத்து மறுத்தால் சத்தியம் தவறுமாயின்,அவையில் சொல்லிய வார்த்தயை அந்தப்புரத்தில் மாற்றினால் அச் சத்தியம் தவறாதோ என்பது மக்கள் வாதம். மேம்போக்காகத் தயரதனை மெய் பிறழ்ந்தவனே என்று காட்டும் இவ்வாதம்; ஆயினும் கூர்ந்து நோக்குவார் உண்மை உணர்வார். கைகேயிக்கு வரம்அளிக்கப்பெற்றது மிகவும் முன்பாகும்; அரசவையில் இராமனுக்கு அரசு உரிமை அளிக்கப்பெறுதற்கு மிகநெடுங்காலம் முன்னரே கைகேயிக்கு அளித்த வரம்தான் இப்பொழுது மீண்டும் எடுத்துமெய்ப்பிக்கப்பட்டுள்ளது. ‘வரம் எது’ என்ற விளக்கம் இப்பொழுது வந்ததே அன்றி, வரம்முன்பே உள்ளது ஆதலின் அஃது எதுவாயினும் அதனை அளிப்பதுதான் தசரதனது, வாய்மையாம். முதற்சொல்லிய சொல்லிற் பிறழாமையே வாய்மை காத்தல் ஆதலின், அதனைக் காத்தற்குப்பின்னர்க் கூறிய அவையிடை நிகழ்ந்த உரையை மாற்றுதல் வாய்மை தவறுதலாகாதாம் என்பதால்வாய்மை காக்கவே வரம் கொடுக்கிறான் தசரதன் - அவையினில் கூறிய சொல் தவறாமைப்பொருட்டுத் தன் உயிரை இழக்கிறான்; இதனால் பின்னால் ‘வாய்மையும் மரபும் காத்து மன்னுயிர்துறந்த வள்ளல்’ என்று (4018) வாலியால் தயரதன் போற்றப்பட்டதாகக் கம்பர்அமைத்தார் எனலாம். 108 |