1714.‘ கோதை வரி வில் குமரற் கொடுத்த நில
மாதை ஒருவர் புணர்வாராம்? வஞ்சித்த
பேதை சிறுவனைப் பின் பார்த்து நிற்குமே,
சீதை பிரியினும் தீராத் திரு?’ என்பார்.

     ‘கோதை வரிவி்ல் குமரன் கொடுத்த நிலமாதை - வெற்றி மாலை
சூடிய கட்டமைந்தகோதண்டத்தை உடைய இராமனுக்குப் பேரவையில்
கொடுக்கப் பெற்ற நிலமகளை; ஒருவர்புணர்வார்- வேறு ஒருவர் (பரதன்)
கூடுவார்; (அப்படிக் கூடினால்); சீதை பிரியினும் -சீதாபிராட்டி காடு
சென்றாலும்; தீராத் திரு - தானும் காடு செல்லாமல்தங்கிவிட்ட
செல்வமகள்; வஞ்சித்த பேதை - வஞ்சனை செய்த கைகேயியின்;
சிறுவனை- மகனாகிய பரதனை; பார்த்துப் பின் நிற்குமே?’ -
பார்த்துக்கொண்டுஏற்றுக்கொண்டு  நிற்பாளா;’ என்பார்-.

     ‘ஆம்’ உரையசை. ‘சீதை பிரியினும் தீராத் திரு’ என்பது  சீதை
இந்நகரத்தை விட்டுப்பிரிந்த அளவில் செல்வ மகளும் இந்நகரை விட்டுப்
போய்விடுவாள் என்பது  குறித்தது.                              109