1943.வெங் கண் நாகத் கரத்தினன், வெண் நிறக்
கங்கை வார் சடைக் கற்றையன், கற்புடை
மங்கை காண நின்று ஆடுகின்றான், வகிர்த்
திங்கள் சூடிய செல்வனின் தோன்றினான்.

     வெங் கண் நாகத் கரத்தினன் - கொடிய கண்ணை உடைய
யானையின் துதிக்கை போன்றநீண்ட கைகளை உடையவனான இராமன்;
வெண் நிறக் கங்கை வார் சடைக் கற்றையன் -வெண்மையான
நிறமுடைய கங்கை ஒழுகப் பெறுகின்ற சடைத் தொகுதிகளை உடையவனாய்;
கற்புடைமங்கை காண - கற்பிற் சிறந்த சீதை காணும்படியாக;  நின்
ஆடுகின்றான் -
(நீரில்) நின்று  நீராடுகின்றான்; வகிர்த்திங்கள் - பிளந்த
சந்திரனை; (பிறையை) சூடிய - தலை மேல் சூடிய;  செல்வனின் - சிவ
பெருமானைப் போல;  தோன்றினான் - தோற்றமளித்தான்.

     கங்கை யொழுகும் சடையோடு பார்வதி காண ஆடுகின்ற  பரம
சிவனைப் போல, இராமனும் சீதைகாணக் கங்கை நீர் ஒழுகுகின்ற
சடையோடு ஆடுகின்றானாம். இங்கே ஆடுதல் என்பது சொல் அளவுக்கு
சிவபெருமானோடு இராமனை ஒப்புறுத்தி இன்புறுத்துவதாம். அங்கே ஆடுதல்
நடனம்,  இங்கே நீராடுதல்என்று பொருளால் வேறுபடும். மங்கை காணல்,
கங்கை நீர் ஒழுகும் சடை உடைமை இருவர்க்கும் பொது.              18