1717. | கண்ணின் கடைத் தீ உக, நெற்றியில் கற்றை நாற, விண்ணில் சுடரும் சுடர் தோன்ற, மெய்ந்நீர் விரிப்ப, உள் நிற்கும் உயிர்ப்பு எனும் ஊதை பிறக்க, நின்ற அண்ணல் பெரியோன் தனது ஆதியின் மூர்த்தி ஒத்தான். |
கணணின்கடைத் தீ உக - கண்முனையிலிருந்து நெருப்புப் பொறி சிந்த; நெற்றியில் கற்றை நாற - அந்நெருப்புப்பட்டு நெற்றி மயிர் சுருஏறி நாற; விண்ணில் சுடரும் சுடர் தோன்ற -வானத்தில் ஒளிவீசும் சூரியன்இலக்குமணனிடமாகித் தோன்ற; மெய்ந்நீர்விரிப்ப - உடம்பு வியர்வைத் துளிகளைஎங்கும் பரவச் செய்ய; உள்நிற்கும் உயிர்ப்பு எனும் ஊதை பிறக்க -உடம்பின் உள்ளே உள்ள நெடு மூச்சு என்னும் காற்று வெளித் தோன்ற; நின்ற அண்ணல்பெரியோன்- சீறி நின்ற தலைமைப்பாடு உடைய இலக்குமணன்; தனது ஆதியின்மூர்த்தி ஒத்தான் - தனது பூர்வ வடிவமாகிய (ஆயிரம் தலை உடைய) ஆதி சேடனைப் போன்றிருந்தான். ‘நெற்றியில் கற்றை நாற’ என்பதற்கு நெற்றி மேல் புருவமயிர் தொகுதி தோன்ற எனஉரைக்கலாம். சீற்றம் மிக்குழிப் புருவம் நெரிந்து நெற்றிமேல் ஏறல் மெய்ப்பாடாம்; இங்கே நாற என்பது தோன்ற என்னும் பொருள். பெறும். ‘புன்புல மயிரும் பூவாக் கட்புலம் புறத்து நாறா வன்பறழ்’ என்புழிப் (4746.) போல இலக்குவன் ஆதிசேடனது அவதாரம் ஆதலின்’ ஆதியின்மூர்த்தி’ என்றார். அரவின் சீற்றம் போன்றது இலக்குவன் சீற்றம் என்பதாம். சூரியன்நெற்றியில் தோன்றச் சினநெருப்பு ஒளிவீசுதல் சூரியன் போலுதலாகும். 112 |