1722. ‘புவிப் பாவை பரம் கெட,
     போரில் வந்தோரை எல்லாம்
அவிப்பானும், அவித்து அவர்
     ஆக்கையை அண்டம் முற்றக்
குவிப்பானும், எனக்கு ஒரு
     கோவினைக் கொற்ற மௌலி
கவிப்பானும், நின்றேன்; இது
     காக்குநர் காமின்’ என்றான்.

     ‘புவிப்பாவை பரம் கெட - உலகம்  என்னும்  மகள்தன் சுமை
நீங்க; போரில்வந்தோரை எல்லாம் - என்னோடு போர்க்கண்
வந்தவர்களைஎல்லாம்; அவிப்பானும் - அழிப்பதற்காகவும்;  அவித்து-
அழித்து;  அவர் ஆக்கையை-
அவர்களின் உடல்களை;  அண்டம்
முற்றக்
குவிப்பானும்- உலகஅண்டமெல்லாம்நிறையக் குவிப்பதற்காகவும்;
எனக்கு ஒரு கோவினை - எனக்கு ஒப்பற்றதலைவனாகஉள்ள
இராமனுக்கு; கொற்ற மௌலி - வெற்றி பொருந்தியமகுடத்தை;
கவிப்பானும் - சூட்டுதற்காகவும்; நின்றேன்- (இப்போது ஆயத்தமாக)
நிற்கின்றேன; இது காக்குநர் காமின்’ -இதைத் தடுத்துக் காத்துக்கொள்ளக்
கூடியவர்கள் காப்பாற்றிக்கொள்ளுங்கள்;’  என்றான்.

     இது கைகேயியையும் அவளைச் சார்ந்தோரையும் நோக்கிக் கூறியதாகக்
கொள்க. ‘காக்குநர்- படர்க்கை. காமின் - முன்னிலை இட வழுவமைதி. 117