2496. | ‘அன்று அவன் உலகினை அளிக்க ஆகியது உன் தனிக் குலம்; முதல் உள்ள வேந்தர்கள் இன்று அளவினும் முறை இகந்துளார் இலை; ஒன்று உளது உரை இனம்; உணரக் கேட்டியால். |
அவன்- அத்திசைமுகன்; அன்று- அக்காலத்து; உலகினை அளிக்க- உலகத்தைப் படைக்க; முதல் ஆகியது - முதலில் உண்டாகியது; உன் தனிக் குலம் - உன்னுடைய ஒப்பற்ற சூரிய குலம்; உள்ள வேந்தர்கள் - இந்தக் குலத்தில் தோன்றியஅரசர்களும்; முறை இகந்து உளார் - முறைமை தவறியவர்; இன்று அளவினும் - இன்றுவரையிலும்; இலை - இல்லை; இனம் ஒன்று உரை உளது - இன்னும் ஒரு வார்த்தைஇருக்கிறது; உணரக் கேட்டி - தெரியக் கேட்பாயாக. “ஆதிமால் அமலன் நாபிக்கமலத் தயனுதித்தயன் மரீசியெனும் அண்ணலை அளித்த பரிசும், காதல் கூர்தரு மரீஇசி மகனாகி வளரும் காசிபன் கதிர் அருக்கனை அளித்த பரிசும் “எனக் (கலிங்கத்துப். இராச. 9) கூறுமாறு திருமால் - அயன் - மரீஇசி, காசிபன் - சூரியன் எனக் குலமுறை காணுதலின் முதற்றோன்றிய குலமாதல் அறிக. நீ மூத்தவனாதலின் முறை இகவாமல் நீயே அரசு புரிதல் வேண்டும் என்பது வசிட்டன் கூற்றாகும். |