1726. | வீறு ஆக்கிய பொற் கலன் வில்லிட, ஆரம் மின்ன, மாறாத் தனிச் சொல் துளி மாரி வழங்கி வந்தான்- கால் தாக்க நிமிர்ந்து, புகைந்து கனன்று, பொங்கும் ஆறாக் கனல் ஆற்றும் ஒர் அஞ்சன மேகம் என்ன. |
வீறு ஆக்கிய பொன் கலன் வில்லிட - அழகிற் சிறந்த பொன்னால் ஆகிய அணிகலன்ஒளி வீச; ஆரம் மின்ன - (மார்பில்) முத்துவடம் ஒளிவிட்டு விளங்க; கால்தாக்க - புயற்காற்று வீச; நிமிர்ந்து - மேல்நோக்கி; புகைந்து - புகைபொங்கி; கனன்று - எரிந்து; பொங்கும் - மேலும் மிகுகின்ற; ஆறாக்கனல் - அணையாத நெருப்பை; ஆற்றும் - அணைக்கின்ற; ஓர் அஞ்சன மேகம் என்ன- ஒரு மை போலும் கரிய மேகம் போல; மாறா - மாறுபடாத; தனிச் சொல் மாரித்துளி - ஒப்பற்ற சொல்லாகிய மழைத் துளியை; வழங்கி - சொல்லிக்கொண்டு; வந்தான்- நெருப்பு. இலக்குவன் சீற்றம். அது தணிக்குஞ் சொல் மழைத்துளி வழங்கும் அஞ்சன மேகம்இராமன் என உருவகம் கொள்க. 121 |