இலக்குவன் கேள்வி 1731. | நீண்டான் அது உரைத்தலும், நித்திலம் தோன்ற நக்கு, ‘ “சேண்தான் தொடர் மாநிலம் நின்னது” என்று, உந்தை செப்பப் பூண்டாய்; “பகையால் இழந்தே, வனம் போதி” என்றால், யாண்டோ, அடியேற்கு இனிச்சீற்றம் அடுப்பது?’ என்றான். |
நீண்டான் - நெடியோனாய இராமன்; அது உரைத்தலும் - அச்சொற் கூறுதலும்; நித்திலம் தோன்ற நக்கு - (இலக்குவன்) பற்கள் வெளி்த் தோன்றச்சிரித்து; ‘சேண்தான் தொடர் மாநிலம் நின்னது’ என்று உந்தை செப்ப - நெடுந்தூரம்பற்றியுள்ள அகன்ற பெரிய கோசல அரசு உன்னுடையது என்று உன் தந்தை சொல்ல; பூண்டாய்- சரி என்று அதனை மேற்கொண்டாய்; பகையால் - பகைவர்களால்;’ இழந்து வனம் போதி என்றால் - அரசை இழந்து காட்டிற்குச் செல்’ என்று சொன்னால்; அடியேற்கு- அடியேனுக்கு; சீற்றம் அடுப்பது - கோபம் உண்டாவது; இனி யாண்டோ’ -இனி எந்த இடத்திலோ;’ என்றான்- இராமனை வனம் போகச் சொன்ன கோபம் கொண்டு எந்தை என்னாமல் தயரதனை ‘நுந்தை’என்றான். சொன்ன சொல்லைப் பகையாளர் பேச்சைக் கேட்டு மாற்றிய இவ்விடத்தில் அல்லவாகோபம் வரவேண்டும். வேறு எவ்விடத்தில் இனிக் கோபம் விளைவது? என்றான் இலக்குவன் என்க. நித்திலம் - முத்து, இங்கே பற்களைக் குறித்தது. 126 |