1734. | ‘நதியின் பிழை அன்று நறும் புனல் இன்மை; அற்றே, பதியின் பிழை அன்று; பயந்து நமைப் புரந்தாள் மதியின் பிழை அன்று; மகன் பிழை அன்று; மைந்த! விதியின் பிழை; நீ இதற்கு என்னை வெகுண்டது?’ என்றான். |
‘மைந்த! - மகனே!; நறும் புனல் இன்மை - (என்றும் நீர் உள்ள ஆற்றிலே ஒரு சில காலங்களில்) நல்ல நீர் இல்லாமல் வற்றிப் போவது; நதியின் பிழைஅன்று -அவ் ஆற்றின் குற்றம் அன்று; அற்றே - அது போலவே; பதியின் பிழைஅன்று - (என்னைக் காடு செல்லும்படி சொன்னது) தந்தையின் குற்றம் அன்று; பயந்துநமைப் புரந்தாள் - (காடு செல்லும்படி வரம் வாங்கியது) பெற்று நம்மைக்காப்பாற்றிவளர்த்தவள் ஆகிய கைகேயியின்; மதியின் பிழை அன்று - அறிவினது குற்றமும் அன்று; மகன் பிழை அன்று - அவள் மகனாகிய பரதனது குற்றம் அன்று; விதியின் பிழை- விதியால் (நமது ஊழ்வினையால்) விளைந்த குற்றமே ஆகும். இங்ஙனம் இதனை ஆராயாது; நீஇதற்கு வெகுண்டது என்னை?’ - நீ இந்தச் செயலுக்கு இவர்களைக் காரணமாக்கிக் கோபித்தது ஏன்?’ என்றான் -. ஊழ்வினை செலுத்தத்தாயும் தந்தையும் அவ்வினையின் கருவியாக இருந்து செயல்பட்டனரேஅன்றி அவர்களாக நம்மேல் பகை கொண்டு செய்தாரில்லை. மழைநீர் வரத்து இன்மையால் சிலகாலம் ஆற்றில் நீர் வற்றுவது போல்வினைவலியால் பெற்றோர் அன்பின்மை உடையார் போலத் தோன்றுவர், அவ்வளவேஎன்றானாம். மூவரையும் தாயர் என ஒப்பக் கருதல் பற்றிக் ‘கைகேயியைப் பயந்து நமைப்புரந்தாள்’ என்றான் இராமன். 129 |