இராமன் தணிப்புரை 1736. | ஆய்தந்து, அவன் அவ் உரை கூறலும், ‘ஐய! நின்தன் வாய் தந்தன கூறுதியோ, மறை தந்த நாவால்? நீ தந்தது, அன்றே, நெறியோர்கண் நிலாதது? ஈன்ற தாய் தந்தை என்றால், அவர்மேல் சலிக்கின்றது என்னோ?’ |
அவன் - இலக்குவன்; ஆய்தந்து - ஆராய்ந்து; அவ் உரை கூறலும் -அந்தச் சொற்களைச் சொன்ன அளவில் (இராமன் அவனை நோக்கி); ‘ஐய! - தம்பி; மறை தந்த நாவால் - வேதங்களைச் சொன்ன நாக்கினால்; நின்தன் வாய்தந்தனகூறுதியோ? - உன் வாயில் வந்தவைகளைக் கூறுகின்றாயோ, நீ தந்தது - நீஇப்பொழுது (உன் வாயால்) தந்த சொல்; நெறியோர்கண் நிலாதது அன்றே? -நல்நெறியில் நடப்பவர்கள் இடத்தில் நிற்கத்தகாத சொல் அல்லவா; ஈன்ற தாய் தந்தை என்றால் - (உன் கருத்திற்கு மாயாக நடப்பவர்) பெற்ற தாயும் தந்தையும் ஆனால்; அவர் மேல் சலிக்கின்றது - அவரிடத்தில் கோபிப்பது; என்னோ?’ - எப்படிப்பொருந்தும். வேதத்தைக் கற்றுணர்ந்த இலக்குமணன் ‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ என்றுஅறிந்துள்ளவன். ஆகவே, அன்னைக்கும் தந்தைக்கும் மாறாக வாய்தந்த வார்த்தைகளைப் பேசுதல்நெறியற்றோர் செயலாகும் என்பது இராமன் சொல்லியதாகும். 131 |