இலக்குவன் பிடிவாதம்  

1737.‘நல் தாதையும் நீ; தனி
     நாயகம் நீ; வயிற்றில்
பெற்றாயும் நீயே; பிறர் இல்லை;
     பிறர்க்கு நல்கக்
கற்றாய்! இது காணுதி இன்று’
     என, கைம்மறித்தான் -
முற்றா மதியம் மிலைந்தான்
     முனிந்தானை அன்னான்.

     முற்றா மதியம் மிலைந்தான் - இளம்பிறை அணிந்த சிவபெருமான்;
முனிந்தானை- சினங் கொண்ட நிலையடைந்தானை;  அன்னான் -
ஒத்தவனாகிய இலக்குவன் (இராமனைநோக்கி); ‘நல்தாதையும் நீ -
(எனக்கு) நல்ல தந்தையும் நீ; தனி நாயகன் நீ- ஒப்பற்ற தலைவனும் நீ;
வயிற்றில் பெற்றாயும் பிறர் இல்லை நீயே - (என்னைப் )பெற்றெடுத்த
தாயும் பிறர் யாரும் இல்லை நீயே;  பிறர்க்கு நல்கக் கற்றாய் -
(எல்லாவற்றையும்) மற்றவர்களுக்குக் கொடுத்து  விடக் கற்றவனே;  இன்று
இது காணுதி
-இன்று  (நான் உனக்கு அரசைப் பெற்றுத் தருவதாகிய)
இதனைப் பார்ப்பாயாக;’  என -என்று சொல்லி;  கைம் மறித்தான் -
(இராமனைத் ) தடுத்தான்.

     எனக்குத் தந்தையும்தாயும் நீயே,  தயரதனும் கைகேயியும் அல்லர்;
ஆகையால் உனக்குத்தீமை செய்த அவர்களைத் தண்டிப்பது  வேதம்
கற்றறிந்தமைக்கு  முரணாகாது என்றான் இலக்குவன். இது என்பது ‘எனது
வில் தொழில்’
என்றுஅவன் கூறியதாகக் கொள்ளினும் அமையும்.     132