இராமன் மறுத்து உரைத்தல்  

1738.வரதன் பகர்வான்; ‘வரம்
     பெற்றவள்தான் இவ் வையம்
சரதம் உடையாள்; அவள், என்
     தனித் தாதை, செப்பப்
பரதன் பெறுவான்; இனி, யான்
     படைக்கின்ற செல்வம்
விரதம்; இதின் நல்லது
     வேறு இனி யாவது?” என்றான்.

     வரதன் - இராமன்;  பகர்வான் - கூறுவான்;  ‘வரம் பெற்றவள்
தான்
- (அரசனுக்குச் சாரதியாய் இருந்து ) வரம் வாங்கிக் கொண்டவளாகிய
கைகேயியை;  இவ்வையம் சரதம் உடையாள் - இவ் வுலக ஆட்சியை
மெய்யாகப் பெறுதற்கு  உரிமை உடையவளாவாள்;  அவள், என் தனித்
தாதை செப்பப் பரதன் பெறுவான்
- அவளும்,  என்ஒப்பற்ற
தந்தையாகிய தயரதனும் சொல்லப் பரதன் (இவ்வரசாட்சியைப் ) பெறுவான்;
இனி- அடுத்து;  யான் படைக்கின்ற  செல்வம் - நான் பெறுகின்ற
செல்வம்;  விரதம் - தவம் ஆகும்;  இதின் நல்லது - இத்தவத்தினும்
நன்மையானது;  இனி வேறு யாவது?- இனி வேறு  என்ன உள்ளது;’
என்றான் -.

     நான் இதனை நல்லது  என்றும்,  இதற்கு மேலாக,  நன்மை
வேறில்லை என்றும்எண்ணுகிறபோது, என்னையே தாயும் தந்தையும் ஆகக்
கருதும் நீ என்னுடைய நன்மையைக் கெடுக்கமுயற்சிக்கலாமா?  என்பது
குறிப்பு.                                                     133