இராமனும் இலக்குவனும் சுமித்திரை கோயில் சேர்தல் 1743. | அன்னான்தனை, ஐயனும், ஆதியொடு அந்தம் ஒன்றாம் தன்னாலும் அளப்ப அருந் தானும், தன் பாங்கர் நின்ற பொன் மான் உரியானும் தழீஇ எனப் புல்லி, பின்னை, சொல் மாண்புடை அன்னை சுமித்திரை கோயில் புக்கான். |
ஐயனும்- இராமனும்; ஆதியொடு அந்தம் ஒன்றாம் தன்னாலும் அளப்ப அருந் தானும் - முதலும் முடிவும் ஒன்றாக உள்ள தன்னாலும் வரையறுத்துக் கூறமுடியாதுள்ள திருமாலாகிய தானும்; தன் பாங்கர் ***பொன்னிறமான மான் தோலை உடைய சிவபிரானும்; தழீஇஎன - தழுவிக் கொண்டாற் போல; அன்னான் தனை- அந்த இலக்குவனை; புல்லி - தழுவி; பின்னை- பிறகு; மாண்பு உடை சொல் அன்னை- மாட்சிமை உடைய சொற்களை உடையளாகிய சுமித்திரைத் தாயின்; கோயில் புக்கான் -மாளிகையைஅடைந்தான். இராமன் இலக்குவனைத் தழுவிய காட்சி திருமால் சிவபெருமானைத் தழுவி நின்றது போலும் என்றார். இலக்குவன் பொன்னிற மேனியன் ஆதலின் பொன்னிறமான மான் உரி போர்த்தசிவபிரான் போல ஆயினன். ஆதியும் அந்தமும் இல்லாத என்பதனை ‘ஆதியும் அந்தமும் ஒன்றாகும்’ என்றார். ஆதிவேறு அந்தம் வேறு என்றால் ஆதி அந்தம் இரண்டாகி உண்டு என ஏற்படும்.‘ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதி’ (திருவா. திருவெம்.1) என்று இறை இயல்புஇவ்வாறே பேசப்படுதல் காண்க. ‘தன் பெருமை தான் அறியாத் தன்மையன்’ என்கிறபடி உள்ளவன் ஆதலின் ‘தன்னாலும் அளப்பருந் தானும்’ என்றார். ‘தானும் காண்கிலன் இன்னமும் தன் பெரும்தலைமை’ என்று (கந்த. சூரன் அமைச்சியல் - 128) சிங்கமுகன் சூரபத்மனுக்கு முருகனைப்பற்றிக் கூறுவதும் காண்க. திருமாலும் சிவனும் இணைந்துள்ள காட்சியை ஆழ்வார்கள். அனுபவித்துக் கூறியுள்ளனர். ‘அரன் நாரணன் நாமம் ஆன் விடை புள் ஊர்தி, உரை நூல் மறை உறையும்கோயில் - வரைநீர், கருமம் அழிப்பு அளிப்புக் கையது வேல் நேமி, உருவம் எரி கார்மேனி ஒன்று’ (திவ்ய.2086) ‘தாழ் சடையும் நீள் முடியும் ஒண் மழுவும் சக்கரமும், துழாயும்பொன்னாணும் தோன்றுமால் - சூழம், திரண்டு அருவிபாயும் திருமலைமேல் எந்தைக்கு இரண்டு உருவும் ஒன்றாய் இசைந்து’ (திவ்ய.2344.) என்ற முதலாழ்வார் பாசுரங்களை இங்கேகாண்க. 138 |