இராமன் சுமித்திரை துயரை ஆற்றுதல் 1744. | கண்டாள், மகனும் மகனும் தன கண்கள் போல்வார், தண்டாவனம் செல்வதற்கே சமைந்தார்கள் தம்மை; புண்தாங்கு நெஞ்சத்தனளாய்ப் படிமேல் புரண்டாள்; உண்டாய துன்பக் கடற்கு எல்லை உணர்ந்திலாதாள். |
(சுமித்திரை) தண்டா வனம் செல்வதற்கே சமைந்தார்கள் - தடைபடாத காட்டுக்குச்செல்வதற்கு உறுதி செய்தவர்களாகிய; மகனும் மகனும் - இராமனும் இலக்குவனும்; ஆகிய தன கண்கள் போல்வார் தம்மை - தன் இரண்டு கண்களையும் போன்றவர்களை; கண்டாள் - பார்த்தாள்; புண்தாங்கு நெஞ்சத்தனளாய் - புண்பட்ட மனம் உடையவளாய்; உண்டாய துன்பக் கடற்கு எல்லை உணர்ந்திலாதாள்- தோன்றிய துன்பம்எனும் கடலுக்கு முடிவு காண மாட்டாது; படிமேல் - மண்ணின் மேல்; புரன்டாள் -விழுந்து புரண்டாள். தண்டா வனம் - எனப் பிரிக்காது ஒன்றாக்கித் தண்டகாரணியம் என்பதாகவும்உரைக்கலாம். சுமித்திரை இந்நிலையில் குறிப்பிட்டு ஓர் இடத்தைச் சுட்டுவது பொருத்தமாய்இராது என்பதால் தண்டா வனம் என்பதாகப் பிரித்துப் பொருள் உரைக்கப் பெற்றது.தண்டகாரணியம் என்பது விந்திய மலைக்கும் சைவல மலைக்கும் இடையில் உள்ள காடு. 139 |