1755. | ‘அன்னையர் அனைவரும், ஆழி வேந்தனும் முன்னையர் அல்லர்; வெந் துயரின் மூழ்கினார்; என்னையும் பிரிந்தனர்; இடர் உறாவகை, உன்னை நீ என்பொருட்டு உதவுவாய்’ என்றான். |
‘அன்னையர் அனைவரும் - (தம்பி!) தாய்மார்கள் எல்லோரும்; ஆழி வேந்தனும் - தயரதனும்; முன்னையர் அல்லர் - முன்பிருந்த நிலைமையில் இருக்கின்றாரல்லர்; வெந் துயரின் மூழ்கினார் - கொடிய துன்பத்தில் முழுகியிருக்கிறார்கள்; என்னையும் பிரிந்தனர்-(இந்நிலையில்) என்னையும் பிரிய உள்ளார்கள். இடர் உறா வகை -இவர்கள் துன்பம் அடையாதபடி; என்பொருட்டு நீ உன்னை உதவுவாய்’ - எனக்காக நீ உன்னையே உதவுவாயாக;’ என்றான் -. அன்னையர் அனைவரும் - கோசலையும் சுமித்திரையும் ஏனைய உரிமை மகளிரும். இராமன்நோக்கில் கைகேயி விலக்கப்பட்டாள் ஆயினும் ‘வெந்துயரின் மூழ்கினார்’ என்னும் பின்வந்த வினையால் கைகேயி விலக்கப்பட்டாளாம். 150 |