1758.‘பைந்தொடி ஒருத்தி சொல் கொண்டு, பார்மகள்
நைந்து உயிர் நடுங்கவும், “நடத்தி கான்” எனா,
உய்ந்தனன் இருந்தனன் உண்மை காவலன்
மைந்தன் என்று, இனைய சொல் வழங்கினாய்?’ எனா.

    ‘பைந்தொடிஒருத்தி சொல் கொண்டு - பசிய பொன்னால்
ஆகிய வளையல்களைஅணிந்த ஒரு கைகேயியின் வார்த்தையை வைத்து;
பார்மகள் -நிலமகள்;  நைந்து உயிர் நடுங்கவும் - தேய்ந்து  உயிர்
தடுமாறவும் (அது கருதாது);  ‘கான் நடத்தி எனா’-  காட்டிற்குச் செல்
என்று  (உன்னை ஏவி); உய்ந்தனன்இருந்தனன் உண்மை காவலன்-
பிழைத்து  உயிர்வாழும் சத்தியத்தைக் காக்கின்ற மன்னனது; மைந்தன்
என்று
- மகன் தானே என்று கருதி;  இனையசொல்வழங்கினாய்?’ -
(என்னைப் பிரிந்து அயோத்தியில் இரு என) இத்தகைய கொடுஞ்
சொல்லைச் சொன்னாய்;’ எனா- என்று சொல்லி,

     ‘நின்கண் பரிவு இல்லவர்’ என்ற (1732) செய்யுளோடு இதனை
ஒப்பிட்டால் இலக்குவன்கூற்றுத் தெளிவாகும். “தந்தையர்  ஒப்பர் மக்கள்
என்பதனால்”  இவ்வாறு  கூறினாயோ என்றான் இலக்குவன். ‘உண்மை
காவலன்’  இங்கு இலக்குவன் நோக்கில் இகழ்ச்சிக் குறிப்பாம்.         153