1763. | அன்னவர் முகத்தி னோடு அகத்தை நோக்கினான்; பொன் அரைச் சீரையின் பொலிவு நோக்கினான்; என் இனி உணர்த்துவது? எடுத்த துன்பத்தால், தன்னையும் உணர்ந்திலன், உணரும் தன்மையான். |
உணரும் தன்மையான் - எல்லாவற்றையும் உணரும் மகா ஞானியாகிய வசிட்டன்; அன்னவர் - இராமலக்குவர்களின்; முகத்தினோடு அகத்தை நோக்கினான் -முகத்தையும் மனத்தையும் கண்ணாலும் நெஞ்சத்தாலும் நோக்கினான்; பொன் அரைச் சீரையின்பொலிவு நோக்கினான் - அழகிய இடையின்கண் அணிந்துள்ள மரவுரியின் பொலிவையும்பார்த்தான். எடுத்த துன்பத்தால் - மேல் ஏறிய துயரத்தால்; தன்னையும் உணர்ந்திலன் - தன்னையும் மறந்தான்; இனி உணர்த்துவது என்? - இனி அவன்துன்பத்தைப்பற்றி சொல்வது எவ்வாறு? கண்ணால் நோக்குதல், மனத்தால் நோக்குதல் என்ற நோக்கம் இருவகையாதலின், முகமும்அகமும் நோக்கினான் என்றார். இவர்கள் அணிந்த படியால் சீரை பொலிவு பெற்றது என்பார்‘சீரையின் பொலிவு’ என்றார். இதுவும் ஒரு நயம். 158 |