இராமன் தந்த விளக்கம் 1769. | ‘ஏன்றனன் எந்தை இவ் வரங்கள்; ஏவினாள் ஈன்றவள்; யான் அது சென்னி ஏந்தினேன்; சான்று என நின்ற நீ தடுத்தியோ?’ என்றான் - தோன்றி நல் அறம் நிறுத்தத் தோன்றினான். |
தோன்றிய நல் அறம் நிறுத்தத் தோன்றினான் - விளங்கிய நல்ல தருமத்தை உலகில் நன்கு நிலைபெறுத்த அவதாரம் செய்த இராமன் (வசிட்டனை நோக்கி); ‘எந்தை - என் தந்தையாகிய தசரதன்; இவ்வரங்கள் - இந்த இரண்டு வரங்களையும்; ஏன்றனன் - தருவதாக - தந்ததாக ஒப்புக்கொண்டான்; ஈன்றவள் - என் தாய்; ஏவினாள் - ஆணை இட்டாள்; அது - அந்த உத்தரவை; யான் -; சென்னி ஏந்தினேன் - தலைமேல் தாங்கினேன்; சான்று என நின்ற நீ - இவற்றுக் கெல்லாம் சாட்சியாக இருந்த நீ; தடுத்தியோ? - இதனை விலக்குகிறாயோ?’ என்றான் -. வரம் கொடுப்பதாக ஒப்புக்கொண்ட பிறகு அரசன் ‘என்னை நேராகக் காட்டுக்குச் செல்’ என்று பார்த்துச் சொல்லவில்லை; ஆதலின், காடு செல்வது அரசன் ஆணையன்று என்று வாதிடுவது பொருந்துமா?’ என்கிறான் இராமன். ‘சகல சாத்திரங்களும் அறிந்தவனாகிய நீ இப்படிச் சொல்லலாமா’ என்பான் ‘சான்று என நின்ற நீ’ என்றான் என்பதும் ஆம். 164 |