மக்கள் துயரம் 1771. | சுற்றிய சீரையன், தொடரும் தம்பியன்., முற்றிய உவகையன், முளரிப் போதினும் குற்றம் இல் முகத்தினன், கொள்கை கண்டவர் உற்றதை ஒருவகை உணர்த்துவாம் அரோ. |
சுற்றிய சீரையன் - இடையில் கட்டிய மரவுரி உடையனாய்; தொடரும் தம்பியன் - தன்னைப் பின்பற்றிவரும் தம்பியோடு; முற்றிய உவகையன் - நிரம்பியமகிழ்ச்சியுடன்; முளரிப் போதினும் - தாமரை மலரைவிட; குற்றம் இல்முகத்தினன் - குற்றமற்ற முகமலர்ச்சி கொண்டு செல்கின்ற இராமனின்; கொள்கை- மனக் கருத்தை; கண்டவர் - அறிந்த அந்நகர மக்கள்; உற்றதை - அடைந்ததுன்பத்தை; ஒருவகை - ஓரளவுக்கு; உணர்த்துவாம் - சொல்லுவோம். கான் புகும் இராமனது முகமலர்ச்சி தாமரை மலரினும்பொலிந்தது என்பதால் அவனது மனத்தின் சமநிலை அறியலாறிற்று. ‘அரோ’ ஈற்றசை. 166 |