1776.நெக்கன உடல்; உயிர் நிலையில் நின்றில;
‘இக் கணம்! இக் கணம்!’ என்னும் தன்மையும்
புக்கன; புறத்தன; புண்ணின் கண் மலர்
உக்கன, நீர் வறந்து, உதிர வாரியே!

     உடல் நெக்கன - (சிலர்) உடல்கள் உடைந்தன;  உயிர் நிலையில்
நின்றில
- உயிர் இருப்பில் நிலையாக இல்லாமல் போயின;  இக்கணம்!
இக்கணம்!  என்னும்தன்மையும் புக்கன,  புறந்தன
- இந்தக் கணம்
போய்விடும் என்னும் தன்மையும் உடையவாய்உயிர்கள் உள்ளே
நுழைந்தன, வெளியே போயின; கண் மலர் - மலர்க்கண்கள்; நீர்வறந்து-
நீர்வற்றி;  புண்ணின் - புண்ணைப் போல;  உதிர வாரி -இரத்தப்
பெருக்கை;  உக்கன - சிந்தின.

     உடல் நெக்குவிட்டு உயிர் இதோ போய்விடும் என்கின்ற நிலையில்
உடலினுள் நுழைவதும்போவதுமாய் ஒரு நிலையில் நில்லாமல் இருந்தது
என்பதாம். கண்கள் குருதி சிந்தின புண்ணைப்போல், ‘ஏ’ ஈற்றசை.     171