1778. | சிந்தின அணி; மணி சிதறி வீழ்ந்தன; பைந் துணர் மாலையின் பரிந்த, மேகலை; நந்தினர், நகை ஒளி விளக்கம்; நங்கைமார் சுந்தர வதனமும், மதிக்குத் தோற்றவே. |
நங்கைமார் - மகளிரின்; அணி சிந்தின - ஆபரணங்கள் எங்கும் சிதறின; மணி சிதறி வீழ்ந்தன - அவற்றில் பொதிதந்த மணிகள் எங்கும் உதிர்ந்து விழுந்தன; மேகலை - அவர் இடையில் அணிந்த மேகலாபரணம்; பைந்துணர் மாலையின்பரிந்த - பசிய பூங்கொத்தால் ஆகிய மாலை அறுந்து விழுவது போல அறுந்து விழுந்தன; நகைஒளி விளக்கம் - புன்சிரிப்பாகிய முக ஒளி மலர்ச்சி; நந்தின- கெட்டன; சுந்தர வதனமும் - அவர்கள் அழகிய முகமும்; மதிக்குத் தோற்ற - நிலவுக்குத்தோற்றன. முன்பு மதியை வென்ற முகம் இப்போது துக்கத்தால்பொலிவிழத்தலின் மதிக்குத் தோற்றது என்றவாறாம். ‘ஏ’ காரம் ஈற்றசை. 173 |