1783. | திடருடைக் குங்குமச் சேறும், சாந்தமும் இடை இடை வண்டல் இட்டு ஆரம் ஈர்த்தன; மிடை முலைக் குவடு ஓரீஇ, மேகலைத் தடங் கடலிடைப் புகுந்த, கண் கலுழி ஆறு அரோ., |
கண் கலுழி ஆறு - (அம் மகளிரது) கண்ணீர்ப் பெருக்காகிய கலங்கிய ஆற்றுவெள்ளம்; திடர் உடைக் குங்குமச் சேறும், சாந்தமும் இடை இடை வண்டல் இட்டு -திட்டுத் திட்டாகப் பொருந்திய (மார்பகத்தில் பூசப்பெற்ற) குங்குமச் சேறும் செஞ்சாந்தமும்ஆகியவற்றை நடுநடுவே சேற்றுக் குழம்பாகக் கொண்டு; ஆரம் ஈர்த்தன - (அவர்கள் மார்பில் அணிந்துள்ள) முத்துமாலையை இழத்துக்கொண்டு; மிடைமுலைக் குவடு ஒரீஇ -நெருங்கியுள்ள முலைச் சிகரங்களிலிருந்து கீழ் இறங்கி; மேகலைத் தடங் கடலிடைப் புகுந்த- மேகலையாகிய அகன்ற கடலுக்குள் நுழைந்து பாய்ந்தன. கலுழி - கலங்கிய நீர் ஆரம் - ஆற்றை நோக்கின்சந்தனமாம். மகளிரை நோக்க முத்தாரமாம். இங்கு முத்துவடம் சிலேடையாக அமைந்தது. மற்றவைஉருவகம். 178 |