1787. | நல் நெடு நளிர் முடி சூட, நல் மணிப் பொன் நெடுந் தேரொடும் பவனி போனவன், துள் நெடுஞ் சீரையும் சுற்றி, மீண்டும், அப் பொன் நெடுந் தெருவிடைப் போதல் மேயினான். |
நல் நெடு நளிர் முடி சூட - சிறந்த பெரிய பெருமை உடைய மகுடத்தைச்சூடிக்கொள்ள; நல் மணிப் பொன் நெடுந் தேரொடும் பவனி போனவன் - நல்ல மணிகள்கட்டப்பெற்ற பொன்னால் ஆகிய பெரிய தேரின்மீது உலாச் சென்ற இராமன்; மீண்டும் - திரும்பவும்; அப் பொன் நெடுந் தெருவிடை - பொலிவுபெற்ற அதே பெருவீதியில்; துன் நெடுஞ் சீரையும் சுற்றி - நெருங்கிய பெரிய மரவுரியைச் சுற்றிக் கொண்டு; போதல் மேயினான் - போவதைப் பொருந்தினான். தேரொடு சென்றவன், சீரையொடு கொண்டு வந்தான் என்பது ஒரு சொல் நயம். இரண்டையும் இணைத்துக் காட்டி அவலத்தை மேலும் அதிகமாக்கினார் கம்பர்.‘கீழ்த்திசை வாயில் கணவனொடு புகுந்தேன், மேற்றிசை வாயில் வறியேன் பெயர்க்கு’ (சிலப். 23:182 - 3) என்ற கண்ணகி நிலையை ஒப்பிடுக. 182 |